Tuesday 1 March 2016

அன்றாட பால்வாதம் (விடுபட்ட பகுதி)

குறிப்பு: பொதுவெளியில் பெண்கள் நிகழ்வில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரையின் நடுவில் ஒரு பகுதி தொழினுட்பக் கோளாறு காரணமாக காணொளியில் தவறவிடப்பட்டிருந்தது.  உரையின் முழுமை கருதியும், முக்கியத்துவம் கருதியும் அதனை ரகுமான் ஜான் அவர்களே எழுத்துவடிவில் பகிர்ந்துகொள்ளுகின்றார்.  ரகுமான் ஜானுக்கு பகுபதம் சார்பில் நன்றிகள்.  இப்பகுதி காணொளியின் 18:45 நிமிடத்தில் வரவேண்டும்.  காணொளியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



அன்றாட பால்வாதம். (விடுபட்ட பகுதி)

எந்தவொரு அதிகார அமைப்பும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு வெறுமனே வன்முறையை (coercion) மாத்திரம் நம்பியிருப்பதில்லை. ஏதோ ஒரு விதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களது சம்மதத்தையும் (conscent) பெற்றுக்கொள்வதாக கிராம்சி குறிப்பிடுகிறார். முதலாளித்துவ நாடுகளில் இது தேர்தல்கள் மூலமாக நடைபெறுகிறது. இந்த அர்த்தத்தில் அரசு என்பதை அவர்மேலாதிக்கம்’ (Dominance) மற்றும்மேலாண்மை’ (Hegemony) என்பவற்றின் கூட்டாக காண்கிறார். இந்த கருத்தை பின்தொடரும் அல்தூசர், ‘சித்தாந்த அரச இயந்திரம்’ (Ideological State Apparatus - ISA) எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். குடும்பம், மதம், பாடசாலைகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றை இந்த சித்தாந்த அரச இயந்திரத்தின் கூறுகளாக வகைப்படுத்துகிறார். இப்படியான சித்தாந்தமானது அதிகார கட்டமைப்புகளை நிலைநிறுத்துவதில் முக்கியமான பாத்திரம் வகிப்பதால் பால்வாத சித்தாந்தம் குறித்து இங்கு சற்று விரிவாக பார்ப்பது அவசியமானதாக ஆகிறது.

சித்தாந்தம் என்பது எம்மிடம் இருக்கும் கருத்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களின் தொகுப்பாகும். சித்தாந்தத்தின் பாத்திரம் பற்றி விளக்கும் அல்தூசர், சித்தாந்தமானது யதார்த்தமான உறவுகளுக்குப் பதிலாக கற்பனையான உறவுகளை படைப்பதாக குறிப்பிடுகிறார். நாம் சித்தாந்தத்தின் ஊடாகவே புற உலகுடன் தொடர்பு கொள்கிறோம் என்பதால் சித்தாந்தமானது எல்லா சமூகத்திலும் அத்தியாவசியமான பாத்திரத்தையம் ஆற்றுகிறது. நாம் ஆதிக்கம் செலுத்துதம் சித்தாந்தத்தின் ஊடாக பார்க்கும்போது சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வான உறவுகள் இயல்பானவையாக எமக்கு தோற்றமளிக்கின்றன. இது எவ்வாறு நடக்கிறது என்று சற்று விரிவாக பார்ப்போம்.

முதலாளித்துவ சித்தாந்தமானது இந்த சமூகத்தில் காணப்படும் வர்க்க வேறுபாடுகளை தனிமனிதரதுவிடாமுயற்சியின்’ (industry) விளைவாக சித்தரிக்கிறது. இந்த சித்தாந்தத்தை உள்வாங்கியவருக்கு முதலாளித்துவத்தின் வர்க்க ஏற்றத்தாழ்வுகள்இயல்பானவையாக தோற்றமளிக்கிறது. அவ்வாறேமனுதர்மம்சாதிய பாகுபாடுகளை கடவுளின் படைப்பாக சித்தரிக்கிறது. தீவிரமான இந்துமத பக்தருக்கு சாதிய ஏற்றத்தாழ்வுகள்இயல்பானவையாகதோற்றம் பெறுகிறது. இவ்வாறே பால்வாதமும் பல்வேறு வகைப்பட்ட பால்வாத சித்தாந்தங்களினால் நியாயப்படுத்தப்படுகின்றன, அல்லதுஇயல்பானவையாகஆக்கப்டுகின்றன (normalization). இது எவ்வாறு நடைபெறுகிறத என்று சற்று விரிவாக பார்ப்போம்.

மத்திய கிழக்கில் தோன்றிய ஆபிரகாமிய வழிவந்த மதங்களான யூத, கிறீஸ்த்தவ, இஸ்லாமிய மதங்கள் அனைத்துமே மனித இனத்தின் படைப்பு தொடர்பாக ஒரேவிதமானதொன்மத்தை’ (mythology) கொண்டுள்ளன. இதன்படி கடவுள் முதல் மனிதன் ஆதாமை மண்ணில் இருந்து படைத்தான் (இவர்களின் விளக்கப்படி கவவுளுக்கு பால் கிடையாது. ஆனால் கடவுளை ஒருமையில் அழைக்கும்போது ஆண்பால்தான் பயன்படுத்துவர்). பின்னர் ஆதாமுக்கு ஒரு துணை தேவைப்படுவதை உணர்ந்து ஏவாளை ஆதாமின் விலா எழும்பில் இருந்து படைக்கிறார். எங்கும் நிறைந்த (omnipresent), எல்லாம் அறிந்த (omniscient), சர்வவல்லமை படைத்த (omnipotent) கடவுளுக்கு, ஆதாமுக்கு ஒரு துணை தேவை என்பது முன்னரே தெரியாமல் போனது ஏன்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஏவாளை படைப்பதற்கு அவசியமான மூலப்பொருள் - அதுதான் ஆதாமை படைத்த அதே மண் - காணமல் போனதால்தானா அவரை ஆதாமில் விலா எழும்பில் இருந்து படைத்தார்? என்ற கேள்வி துருத்திக்கொண்டு நிற்கிறது அல்லவா? இந்த புராணவியலை உண்மையாக நம்பும் ஒருவர் பாலின ஏற்றத்தாழ்வை கேள்விக்குள்ளாக்கமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்லவே! இதனைவிட அபத்தமானது, ‘முதல்பாவம்பற்றிய கற்பனையாகும். இதன்படி ஆதாமை தவறாக வழிநடத்த முனைந்த சாத்தான், இதனை நேரடியாக ஆதாமிடம் செய்ய முனைந்தால் பலனளிக்காது என உணர்ந்து, ஏவாள் மூலமாக ஆதாமை தவறாக வழிநடத்துகிறான் (ஆம் மீண்டும் அதே ஆண்பால்தான்). இறைவன் தடைசெய்திருந்த பழத்தை ஆதாம் உண்ணுமாறு தவறாக ஆதாமை வழிநடத்திய பாவம் ஏவாளையே சார்கிறது. இதுவொன்றும் சாதாரணமான கதையல்ல. “தையற்சொல் கேளேல்என்பதன் ஊற்றுமூலத்தை இங்கு நாம் காணலாம். இவ்வாறாக கட்டுக்கதைகள் ஏனைய மதங்களிலும் இருக்கின்றன. சில பெண்களது மாதவிடாயை அடிப்படையாக கொண்டவையாக அமைகின்றன.

இப்படியாக பால்வாத சித்தாந்தத்தின் பிடிக்குள், செல்வாக்கினுள் இருக்கும் ஒருவர் பால்வாதத்தை கேள்விக்குள்ளாக்குவது மிகவும் சிரமானது. ஆயினும் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது அனுபவத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமாகவம், ஆண் - பெண் சமத்துவம் பற்றிய ஜனநாயக எண்ணங்கள் காரணமாகவும் பால்வாதத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறார்கள். ஆண்களைப் பொருத்தவரையில் பால்வாதமானது அவர்களுக்கு சாதகமாகவே செயற்படுவதை உணர்கிறார்கள். ஆதலால் பலர் தனை விரும்பியே ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் மாத்திரம் ஜனநாயக கருத்துக்களின் பாதிப்பினாலும், பெண்ணிய கருத்துக்களின் அறிமுகம் காரணமாகவும் ஆணாதிக்க உறவுகளை கேள்விக்குள்ளாக்கி தம்மை அதிலிருந்து பிரக்ஞைபூர்வமாக விடுவித்துக்கொள்கிறார்கள். ஆனாலும் இந்த விடுவித்துக்கொள்ளல் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. பிரக்ஞைபூர்வமாக இவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் இவர்களால் ஆணாதிக்க கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்தபோதிலும், பல்வேறு நிலைகளில் இவர்களையும் மீறி, இவர்களுள் ஆழமாக புதைந்திருக்கும் ஆணாதிக்க கருத்துக்கள் தலையை காட்டவே செய்கின்றன. இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

சித்தாந்தமானது ஒருவரது தன்னிலையை (subjectivity) கட்டமைப்பதாகவும், இது மொழியின் ஊடாகவே நடைபெறுவதாகவும் அமைப்பியல் உளவியலாளரான லக்கான் என்பவர் குறிப்பிடுகிறார். எனவே ஒருவர் தம்மை பால்வாதத்தில் இருந்து முழுமையாக, முரணற்ற வித்தில் விடுவித்துக்கொள்வதானால், அது அவரது அன்றாட மொழிப் பாவனையில் இருந்து தொடங்கியாக வேண்டியுள்ளது. இதுதான் இந்த கூட்டத்தின் முக்கிய கருப்பொருளானபால்வாதமும் மொழியும்என்பதற்கான கோட்பாட்டுரீதியான அடிப்படையாகும். அதிகார உறவுகளை கட்டமைப்பதில் மொழியின் இந்த முக்கியமான பாத்திரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், மொழி தொடர்பான பெண்ணியவாதிகளின் அக்கறைகளை உதாசீனம் செய்கிறார்கள். இவர்கள் மொழி என்பது ஒரு வெறும் தொடர்பு ஊடகமே என்பதால், இது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இதனால் தமது அன்றாட மொழிப்பாவனையில் ஆணாதிக்க மொழியை எவ்வித பிரக்ஞையும் இன்றி சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சில இடதுசாரிகள் மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக தாம் அப்படிப்பட்ட சொல்லாடல்களை கையாள்வதாக கூறிக்கொள்கிறார்கள். உதாரணமாக, ‘வினவுவலைப்பக்கத்தில்கற்பழிப்புஎன்ற வார்த்தையை சர்வசாதரணமாக பயன்படுத்தி வந்தார்கள். இதனை சிலர் சுட்டிக்காட்டியபோது, தாம் மக்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக அப்படிப்பட்ட சொற்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாக நியாயப்படுத்தினார்கள். இந்த கூற்றை சற்று கூர்ந்து நோக்கினால் இந்த கூற்றில் உள்ள அபத்தம் புரியவரும். உதாரணமாக, காப்பரேட், வால்தெருபோன்ற சொற்றொடர்களையெல்லாம் மக்களுக்கு புரியும் என்று கேட்டுக்கொண்டா பயன்படுத்துகிறார்கள். மாறாக, “கற்பழிப்புஎன்பதற்குப் பதிலாக பாலியல் வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்பதை பயன்படுத்தினால் மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன? அப்படி ஏதாவது சில வார்த்தைகள் புரியாமல் இருந்தாலும் அதற்கான விளக்கத்தை அளிக்கலாம், அல்லது அவர்களே கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் மொழியில் உள்ள பால்வாதம் பற்றி மக்களுக்கு விளக்க கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திகொள்ளலாம் அல்லவா? ஆகவே பிரச்சனை இதனைவிட ஆழமானதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

அண்மையில்ஊத்திக்கொடுத்த உத்தமிபாடல் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்போதும் இதுதானே நடந்தது. ஜெயலலிதா ஒரு பெண்பதால் நாம் அவரை விமர்சிப்பதற்கு அவரதுநடத்தைஎன்ற வழமையான ஆணாதிக்க ஆயுதத்தை கையிலெடுப்பதாகத்தானே அர்த்தம் பெறும். ஆனால் கருணாநிதியை விமர்சிப்பதற்கு அவரது நடத்தை கருத்திற்கொள்ளாதது ஏன்? இது நிச்சயமாக ஒரு இரட்டை அளவீடுகளை கொண்டுள்ள ஆணாதிக்க மொழிப்பிரயோகம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது அல்லவா? அவ்வாறுதான், “ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும்பேனாம்என்ற பழமொழி இதே நபர்களால் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். ஆகவே இங்கே இருப்பது மக்களுக்கு போதிப்பத பற்றிய பிரச்சனையல்ல. சம்பந்தப்பட்ட நபர்களது அரசியல் ஆகும். அதாவது, இங்கு, ‘அரசியலானது போதனாமுறையுடன் போட்டுக் குழப்பப்படுகிறது’. Confusing Politics with Pedagogy. இதனை சற்று விரிவாக பார்ப்பது அவசியமானதாகிறது.

மொழி பற்றியும், அதில் நிலவும் ஆதிக்க தன்மைகள் பற்றியும் இவர்கள் அறியாமல் இல்லை. பல இடங்களில் இவர்கள் அதனை சரிவர கையாளவும் செய்கிறார்கள். குறிப்பாக சாதிகள் பற்றிய விடயங்களில் இவர்களது மொழிப்பாவனைகள் மோசமாக இருப்பதில்லை. ஆனால் மொழி அல்லது சொல்லாடல்கள் பற்றிய விடயத்தில் இவர்களால்முரணில்லாமல்’ (consistency உடன்) இவர்களால் செயற்பட முடியாதுள்ளது. இதற்கு காரணம் மொழி அல்லது சொல்லாடல்கள் பற்றிய அரசியலை பற்றிக்கொள்ள இவர்கள் பயப்படுகிறார்கள். சொல்லாடல்கள் பற்றிய அக்கறையானது தவிர்க்கமுடியாதபடி தம்மை பின்நவீனத்துவத்தினுள் தள்ளிவிடும் என்ற பயம் இவர்களிடம் வெளிப்படுகிறது. இது தேவையற்ற அச்சமாகும். சொல்லாடல் பற்றிய அக்கறையுள்ள அனைவரும் பின்நவீனத்துவவாதிகளாக ஆகிவிடுவதும் கிடையாது. எல்லா பின்நவீனத்துவவாதிகளும் மார்க்சிய எதிர்ப்பாளர்களும் கிடையாது. உதாரணமாக, Slavo Zizek என்பவர்மார்க்சியம் எதிர் பின்னவீனத்துவம்என்ற பாகுபாட்டை ஏற்றுக்கொள்பவர் அல்லர். அவ்வாறே சொல்லாடல்கள் பற்றிய நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டே மார்க்சியவாதிகளாக பலர் உள்ளார்கள். உதாரணமாக Richerd Peet (Geography of Power என்ற நூலின் ஆசிரியர்) என்பவர் சொல்லாடல்கள் பற்றிய அக்கறையுடன் எழுதுகிறார். அவ்வாறே David Mcnally (Monster of the Market எனும் இவரது நூலில், ‘உடலரசியலைஅருமையான கையாண்டுள்ளார்) போன்றவரை குறிப்பிடலாம். ஆகவே இடதுசாரிகள் சொல்லாடல்கள் பற்றிய அரசியலை அப்படியே ஒதுக்கிவிடாமல், இந்த விடயத்தை தீவிரமான கோட்பாட்டு அக்கறையுடன் கையில் எடுத்தாக வேண்டியுள்ளது. ஒருவேளை அதன் தொடர்ச்சியாக வரும் ஏனைய அரசியல் நிலைப்பாடுகளுடன் இவர்களால் முழுமையான இணக்கம் காண முடியாமலும் போகலாம். ஆனால் அதற்காக இருபத்தி ஓராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்பதத்தில் நின்றுகொண்டுகற்பழிப்பு” “உத்தமிபோன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவது சில தளங்களில் இவர்கள் Liberal Media வைவிட பின்தங்கியிருப்பதாக அர்த்தப்பட்டுவிடும் என்பதை கவனத்திற்கொள்வது அவசியமானதாகிறது. ‘புரட்சிகர கட்சி என்பது மக்களின் முன்னணிப்படைஎன்பதை மறந்து மக்களின் வாலாக செயற்படுவதை நியாயப்படுத்த முடியாது.

அடுத்த பிரச்சனை பொதுப்புத்தி பற்றியதாகும். சமூகத்தில் சர்ச்சைக்குரியதாக இருக்கும் பிரச்சனைகளை அணுகும்போது பலரும் பொதுப்புத்தி மட்டத்தில் அவற்றை கையாள முனைகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொதுப்புத்தியானது கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்படுவதல்ல. மாறாக சமூகத்திலுள்ள ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவதாகும். ஆகவே பொதுப்புத்தி மட்டத்தில் விடயங்களை எவ்வளவுதான்தர்க்கரீதியாககையாண்டாலும் அது தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் ஆதிக்க சித்தாந்தத்ததை மறுஉற்பத்தி செய்வதிலேயே போய்முடியும். ஆகவே சமூகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை அணுகும்போது எப்போதும் பொதுப்புத்தி மட்டத்தில் அணுகாமல் கோட்பாட்டு மட்டத்தில் அணுகுவதை உத்தரவாதப்படுத்திக்கொள்வது சமூக அக்கறையுள்ளவர்களின் கடமையாகிறது.

இப்படியாக பொதுப்புத்தி மட்டத்தில் பெண்ணியத்திற்கு எதிராக, பால்வாதத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சில விமர்சனங்களை எடுத்துக்கொள்வோம்.

·  பெண்களை பின்புத்தி உடையவர்கள் என்று சொல்வது அவர்கள் பின்னால் வரக்கூடிய விளைவுகளை உணரக்கூடியவர்கள் என்ற அர்த்தத்திலேயே கூறப்படுதாகும்”.
·  மடமை என்பதற்கு வேறு அர்த்தம் கொள்ள வேண்டும்”.
·  பெண்கள் சிறந்த நிர்வாகிகள் அல்லர்”.
·  பெண்கள் நல்ல மாப்பிள்ளைகளை தேடுவதால் அவர்களிடம் சீதனத்தை ஆண்கள் எதிர்பார்ப்பதில் என்ற தவறு”.
·  Rape is not sex. It is a crime என்பது பெண்ணியவாதிகளின் மிகைப்படுத்தப்பட்ட கூற்று

இப்படியான ஒரு நீண்ட பட்டியலை ஆணாதிக்கத்தை நியாயப்படுத்த முனைவோர் முன்வைக்கின்றனர். இந்த வாதங்கள் எதுவுமே பரிசீலனைக்கே எடுபபதற்கு தகுதியற்ற ஆணாதிக்க குப்கைகள் என்பது வெளிப்படையாது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவற்றை தனிப்பட்ட முறையிலும், ஏன் பொதுவெளிகளிலும் முன்வைக்கும் நபர்கள் ஒன்றும் சாதாரண பாமரர்கள் கிடையாது. நான் குறிப்பிடுபவர்கள் பட்டமேற்படிப்பை மேற்கொண்டுள்ள, சமூக அக்கறையுடன் செயற்படும் நபர்கள் எனும்போது பால்வாத சித்தாந்தம் எவ்வளவு ஆழமாக எமது சமூகத்தில் புரையோடியிருக்கிறது என்பது குறித்து நாம் அதிகம் கவலைப்பட்டாக வேண்டியிருக்கிறது.